காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த விடாமல் முடக்குவோம் என அதிமுக எம்.பி மைத்ரேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்தும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. 

கடந்த 3 நாட்களாக தமிழகத்தை சேர்ந்த திமுக மற்றும் அதிமுக MP-க்கள் இணைந்து நாடாளுமன்ற அலுவல்களை நடத்த விடாமல் முடக்கி வருகின்றனர். 

இதனிடையே காவிரி மேலான்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் அனைத்து கட்சி தலைவர்களை பார்க்க மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மத்திய நீர்வளத்துறையிடம் ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசு கூறியதாக தெரிகிறது. இதைகேட்ட ஸ்டாலின், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அதிமுக எம்.பிக்களும், திமுக எம்.பிக்களும் சேர்ந்து பதவிகளை ராஜினாமா செய்ய சொல்வோம் என எடப்பாடியை வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி-யான மைத்ரேயன், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என தெரிவித்தார்.