காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  ஆனால் மத்திய அரசோ 6 வாரமாக எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல் கடைசி நேரம் வரை நம்பவைத்து கம்பி நீட்டிவிட்டது.

அதிமுக எம்பிக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யப் போவதாக கூறுவதால் முதல்வர் எடப்பாடியார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வந்தது. 'கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடக்கவிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டால் அது நமக்கு தேர்தலில் பிரதிபலிக்குமோ என்ற எண்ணத்தில் தமிழகம் எவ்வளவு கத்தியும் கேட்காமல் இருக்க காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டது.

தற்கொலை நாடகமும், அசால்டாக அடித்த அந்தர் பல்டியும்”

இது இப்படியிருக்க எதிர் கட்சிகளோ தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற அழுத்தம் அதிகரித்து கொடுத்தது. இதனால் நேற்று நடந்த நாடாளுமன்றத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன், ' மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? எங்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துகின்றனர்' என எப்படி கத்திக் கூச்சலிட்டாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை எனத் தெரிந்தே ஆவேசமாக அலப்பறை செய்தார்.

இவரது தற்கொலைப் பேச்சுக்கு கருத்து என்ற பெயரில் ஜகா வாங்கினார் திருச்சி எம்.பி குமார்,' அதாவது, நவநீத கிருஷ்ணன் பேசியது அவரது சொந்தக் கருத்து' என அந்தர் பல்டி அடித்தார்.தற்கொலை செய்துகொள்வோம் என ஒரு எம்.பி.முக்கி முக்கி கத்தியதை மற்றொரு எம்.பி அது அவரது சொந்த கருத்து நாங்கள் அப்படி செய்யமாட்டோம் என சொன்னதற்கு சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.

கர்நாடக தேர்தலால் தமிழக அரசை புறக்கணித்த மத்திய அரசு!

இப்படியே உச்சநீதிமன்றம் கொடுத்த இந்த 6 வார காலம் கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இத்தனை வாரங்களாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்களோ 'கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடக்கவிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது நமக்கு தான் ஆப்பு. அதனால் தான் இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழக அரசை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

கடைசிவரை மௌனமாகவே இருந்து கம்பி நீட்டிய மத்திய அரசு!

6 வாரங்கள் அமைதியாகவே இருந்த மத்திய அரசு இடையில் கண்துடைப்புகாக ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டியது. அதுமட்டுமல்லாமல் ஸ்கீம் என்றால் வாரியமா? அல்லது குழுவா என்று சந்தேகத்தை தீர்த்து கொள்ள உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாம். இதுபோல் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை பகைத்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே கடைசி நிமிடம் வரை மத்திய அரசு காலம் தாழ்த்தி கொண்டே சென்றது.

தற்போது வரை எதையும் அறிவிக்காமல் தமிழக மக்களையும் சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் அவமதித்துவிட்டது. இது முழுக்க முழுக்க தமிழக அரசை நம்ப வைத்து முதுகில் குத்திய செயலாகவே கருதப்படுகிறது. இன்று வரை மத்திய பாஜகவை விட்டு கொடுக்காமலேயே தமிழக பாஜக பேசி வந்தது. இந்நிலையில் தமிழர்களை ஆறு வார காலம் எந்த முடியும் எடுக்காமல் கடைசிவரை மௌனமாகவே இருந்து கம்பி நீட்டிவிட்டது.