அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒசூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர் பாலகிருஷ்ண ரெட்டி. கிருஷ்ணகிரியில் 1998ல் நடந்த போராட்டத்தின்போது பேருந்து, போலீஸ் வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தியதாக 4 பேர் பாலகிருஷ்ண ரெட்டி மீது  வழக்குத் தொடுத்தனர்.

அந்த வழக்கு எம்.எல்.ஏ, எம்பிகள் வழக்கை விசாரிக்கும் சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் அவரது பதவி பறிக்கப்படும். அதன்படி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்த பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோகிறது.

எம்.எல்.ஏ எம்.பிக்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் வழங்கிய இரண்டாவது தீர்ப்பு இது. கடந்த 10 நாட்களுக்கு முன் பெரம்பலூரை சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ நாகராஜ் சிறுமி பாலியல் விவகாரத்தில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.