மாநிலங்களவை தேர்தலில் எம்.பி. பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழகத்திலிருந்து 2014-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், சசிகலா புஷ்பா, திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக தரப்பிலிருந்து தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யலாம் என்ற நிலையில், தற்போதே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான ரேஸ் தொடங்கியுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக அதிமுகவுக்கு வலியுறுத்திவந்தது. கூட்டணி ஒப்பந்தத்தின்போதே மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பேசப்பட்டதாக தெரிவித்த பிரேமலதா, கூட்டணி தர்மப்படி அதிமுக தங்களுக்கு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்தில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் நேற்று மாலை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக கோரிக்கை வைத்தார். 

இதையும் படிங்க;- விசில் அடிக்கணும்.. கல்லை விட்டு எறியணும்.. அவரே அதிமுககாரர் ராஜேந்திர பாலாஜி அட்ராசிட்டி..!

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- மாநிலங்களவை தேர்தலில் எம்.பி. பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது தொடர்பாக பாமகவுடன் மட்டுமே அதிமுக ஒப்பந்தம் செய்தது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமை முடிவு செய்யும் என கூறியுள்ளார். மேலும், ரஜினி-கமல் இணைந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.