அதிமுகவினர் காந்தியின் கையை பிடித்து வந்தவர்கள் இல்லை, எம்.ஜி.ஆரின் கையை பிடித்து வந்தவர்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தர பாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:- ஜெயலலிதாவிற்கு 72 வயது, எம்.ஜி.ஆர்.,க்கு 103 வயது என சொன்னால் நம்ப முடிகிறதா? இறக்கும் வரையில் அடிமைப்பெண் படத்தில் நடித்தது போல் இருந்தார் எம்.ஜி.ஆர்.,. வயதான தோற்றத்தில் அவரை பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் விதி வசத்தால் ஜெயலலிதா இறந்துவிட்டார். 

தமிழகத்தில் ஏழை- எளிய மக்கள் ஆட்சி நடைபெறுகின்றது. ஏழை-எளிய மக்களைப் பற்றி சிந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தமிழக முதல்வர் எடப்படியார் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

எடப்பாடியார் இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர். தமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி விட்டு ஆட்சிக்கு வர துடிக்கிறது. தற்போது இஸ்லாமியர்களை தூண்டி விட்டு திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். மதக்கலவரத்தை தூண்டி விடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை கேட்க உரிமை உள்ளது. அதை விடுத்து கலவரம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. 

மேலும் பேசிய அவர், அதிமுகவினர் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் அல்ல, எம்.ஜி.ஆர். கையை பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம். அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது. அதிமுககாரன், விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.