ஸ்டெர்லைட் விவகாரம் தீப்பிழம்பு போல் தென் தமிழகத்தில் கனன்று எரிய துவங்கியுள்ளது. சமூக செயற்பாட்டாளர்களை தாண்டி, பல தளங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கூட இப்போராட்டத்தில் கலந்து, மக்களுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். 

இந்தியாவின் உச்ச நடிகரான கமல்ஹாசன் தூத்துக்குடிக்கு ஓடிச் சென்று தன் குரலை உயர்த்தி பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார். அரை செஞ்சுரி நாட்களைக் கடந்து போராட்டம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இத்தனை நாட்களாக வாய் திறக்காத தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய துறை அமைச்சர் கருப்பணன் இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார். 

அதுவும்....”தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், விரிவாக்க பணிகளை துவக்கியுள்ளது. இதை கண்டித்து ஆலையை சுற்றியுள்ள பொதுமக்கள், அரசுக்கு புகார்களை அளித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் இந்த அரசு, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே இன்று ‘கமல்ஹாசன் ஸ்டெர்லைட் விஷயத்தில் மக்களை தூண்டி விடுகிறார்.’ என்று கூறியுள்ளார். 

கமலை இப்படி இடித்துப் பேச தெரிந்த கருப்பணனுக்கு, ‘போராட்டம் இத்தனை நாட்கள் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு, மெளனமாக இருப்பது புதிராக இருக்கிறது’ என்று நேரடியாக தன்னை இடித்துப் பேசிய ரஜினிக்கு எதிராக கருப்பணனால் ஒரு எழுத்தைக் கூட உச்சரிக்க இயலவில்லை. 
எல்லாம், மோடி பயம்தான்! என்கிறார்கள் விமர்சர்கர்கள்.