Asianet News TamilAsianet News Tamil

வடமாநிலம் மட்டும் தான் இந்தியாவா..? தமிழர்களை மத்திய அரசு அவமதிக்கிறது.. கனிமொழி பரபரப்பு ட்வீட்..

குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாகவும் எம்.பி கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார்.
 

MP kanimozhi tweet
Author
Tamilnádu, First Published Jan 17, 2022, 4:16 PM IST

குடியரசு தின விழாவையொட்டி வரும் 26ஆம் தேதி புது டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிப்பு என தெரிய வந்துள்ளது. இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார். 

வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. அதற்கு விதிமுறைகள் காரணமாக சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு நிராகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஆகியோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios