கார், இருசக்கர வாகனங்கள், பயணிகளுக்கான வாகனங்கள் என இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பான எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.

1997-98ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் மொத்த வாகன விற்பனையில் கடுமையான சரிவைக் கண்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை 18,21,490 ஆக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை 23,82,436 ஆக இருந்துள்ளது. இது வாகன விற்பனையில் 23.55 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது.

மேலும், கடந்த ஜூலை மாதம் மொத்த வாகன விற்பனை கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக சரிவடைந்து, 18,25,148 ஆக இருந்தது. இதே ஜூலை மாதம் 2018ம் ஆண்டு வாகன விற்பனை 22,45,223 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேப்போல மோட்டார் சைக்கிள் விற்பனையும் கடந்த மாதம் 22.33 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 12,07,005 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 9,37,486 ஆகக் குறைந்துள்ளது.