More votes for the BJP than the ruling Congress in Puducherry

குடியரசு தலைவர் தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸைவிட பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பது, அமித் ஷாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

குடியரசு தலைவர் தேர்தலையொட்டி, ஆளும் பாஜகவின் வாக்குகளை உறுதி படுத்தி கொள்வதற்காக, மாநிலம் தோறும் பயணம் மேற்கொண்டுள்ளார், அக்கட்சியின் தலைவர் அமித் ஷா.

அந்த வகையில் புதுச்சேரி வந்த அமித் ஷாவை சந்தித்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக வினர் தங்களது வாக்குகளை உறுதி செய்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள்தொகை கணக்கின் அடிப்படையில், எம்.பி-க்கு 708 வாக்குகளும், எம்.எல்.ஏ-வுக்கு 16 வாக்குகளும் உள்ளன.

அதன்படி, 30 தொகுதி எம்.எல்.ஏ-க்களுக்கும் மொத்த வாக்குகளே 480 தான். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன், அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் 1416 வாக்குகள் உள்ளன.

இதில், இரு எம்.பி க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களில் 5 பெரும், அதிமுக எம்.எல்.ஏ க்களில் 3 பேரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மற்ற எம்.எல்.ஏ க்கள், அமித் ஷாவுடனான சந்திப்பை தவிர்த்து விட்டனர்.

இதன்படி, இதுவரை புதுவை மாநிலத்தில் 1544 வாக்குகள் பாஜக வேட்பாளருக்கு உறுதியாகி உள்ளது. மேலும் என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ க்களின் வாக்குகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே சமயம், ஆளும் காங்கிரசுக்கு எம்.பி க்கள் யாரும் இல்லாததால், எம்.எல்.ஏ வாக்குகள் என்ற அடிப்படையில், நாராயணசாமியால் வெறும் 352 வாக்குகளை மட்டுமே பெற்றுத்தர முடியும்.

இதனால், குடியரசு தலைவர் தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் வாக்குகளே அதிக எண்ணிக்கையில் உள்ளதால், புதுவையில் பாஜகவின் பலமே ஓங்கி உள்ளது. இது பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.