பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என  பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.   

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டமாக கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிப்பின் போதும், பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார். 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதில்,  ஊரடங்கு தளர்வு 2.0 தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது, அவர் பேசுகையில் கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு ஊரடங்கு தளர்வு 2ம் கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். உரிய நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2 அடி இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து  போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆகையால், இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். விதிகளை மீறுவோர்களை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. தளர்வு நேரத்தில் சிறிய தவறு கூட அதிக விளைவுகளை ஏற்படுத்தும். 

பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை எனவும் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டன என்று கூறினார்.