Money Distribution in R.K.Nagar election
தமிழ்நாட்டில் தேர்தலின்போது நடத்தப்படும் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது என தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற போதும் பணப்பட்டுவாடாவை தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் பலன் அளிக்கும் விதமாக இருக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ஆளும் அதிமுக சார்பில் ஓட்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதே போல் டி.டி.வி.தினகரன் சார்பில் 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் 10000 ரூபாய் வீதம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. என்ன முயன்றும் இடைத் தேர்தலின்போது பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற நிலையே இருந்து வந்ததது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஏ.கே.ஜோதி நேற்று ஓய்வி பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளகளிடம் பேசிய ம் பிரகாஷ் ராவத் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் ஒரு கதவை அடைத்தால், வேட்பாளர்கள் வேறு ஒரு கதவை திறந்துவிடுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
