பாம்பின் வாயில் சிக்கிய தவளை போன்று அதிமுக, பாஜக கட்சியிடம் சிக்கி கொண்டு உள்ளது என  முத்தரசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்று அமைச்சர்களால் கூற முடியாது. பிரதமர் மோடி தான் முடிவு செய்வார். ஏனென்றால் பாம்பின் வாயில் சிக்கிய தவளை போன்று அதிமுக, பாஜக கட்சியிடம் சிக்கி கொண்டு உள்ளது. குறிப்பாக பாஜக அதிகார பலத்தை பயன்படுத்தி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாஜகவின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.


 
மேலும், பேசிய அவர் மாநில உரிமையை மீட்கவும் திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கில் பரவியதற்கு காரணம் மத்திய அரசு தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தும், மத்திய அரசு எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.