மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளிடுவார் என நம்புவதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

காவிரி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி நீரில் தமிழகத்துக்குரிய பங்கு தண்ணீரை குறைத்து அறிவித்தது. அதே நேரத்தில் காவிரி தண்ணீர் முறையாக பிரித்து வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கிட்டத்தட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு துரோகம்  இழைக்கப்பட்டு விட்டதாக  குற்றம் சாடடியுள்ள தமிழக அரசியல் கட்சிகள் இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது.

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாள்களிடம்  பேசிய , நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான மோடி, அவருக்கு பிறந்த நாள் பரிசாக இந்த அறிவிப்பை வெளியிடுவார் என தனக்கு நம்பிக்கை உள்ளது என தம்பிதுரை தெரிவித்தார்.