பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளில் முதலீட்டை திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். 

அவரது அமைச்சரவை சகாக்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மும்பையை சோ்ந்த தகவல் அறியும் ஆர்வலர் அனில் கல்கலி பிரதமா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களைக் கோரியிருந்தார். 

இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில், பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டு முதல் 2018-19 ஆம் நிதியாண்டு வரையிலும் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிட்டுள்ளனர். 

அதாவது, பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வெளிநாடு பயணங்களில் ரூ.263 கோடியும், உள்நாட்டு பயணங்களில் ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர். மத்திய இணையமைச்சர்கள் வெளிநாடு பயணங்களில் ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணங்களில் ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர்.

இதில் அதிகப்பட்சமாக கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் பிரதமர் மோடி, அவரது மத்திய அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களில் ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனியார் விமானங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணம், விமான பராமரிப்பு, தொலைபேசி கட்டணம் என்று மொத்தம் ரூ.2021 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.