மேற்கு வங்க மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். கொல்கத்தாவி்ல் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி நடந்த இளைஞர்கள் கூட்டத்தில்  பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சுதந்தரத்துக்கு முன் இந்த தேசம் பிரிவினையின்போது, பாகிஸ்தான் சென்ற மதரீதியான சிறுபான்மையினர் அங்கு அனுபவிக்கும் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றி அவர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்கிடத்தான் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தோம். அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலில் சிக்கிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட பேசி இருந்தார். 

அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் மதரீதியாக துன்புறுத்தலில் சிக்கி இருக்கும் போது அவர்களை சாகட்டும் என்று விட்டுவிடலாமா அல்லது காப்பாற்றலாமா  என்பதை இளைஞர்கள் சொல்லட்டும். 

நமது சுதந்திரப்போராட்ட வீரர்கள், தியாகிகள் ஆசைப்பட்டத்தை நாங்கள் செய்துள்ளோம். நூற்றாண்டுகாலமாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. மதரீதியாக துன்புறுத்தல்களை சிக்கி இருக்கும் எந்த மக்களும், இந்தியாவின் குடியுரிமையை விதிமுறையின்படி பெறலாம். நாங்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்கமாட்டோம். 

மாறாக இந்த சட்டம் குடியுரிமை வழங்கும். ஒருவர் மதரீதியாக இருந்தாலும், அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும், இல்லாதவராகவும் இருந்தாலும் சரி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் படி ஏற்கனவே இருக்கும் விதிமுறைகள்படி குடியுரிமை  கிடைக்கும். எங்கள தலைமையிலான அரசு குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால், பாகிஸ்தான் சிறுபான்மை மக்கள் மீது நடத்தும் கொடுமைகளை உலகம் தெரிந்திருக்காது. 

இதுதான் எங்கள் நடவடிக்கையின் நோக்கம். கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு பாகிஸ்தான் பதில் அளிக்க ேவண்டிய நிலையில் இருக்கிறது வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தில் குடியுரிமைத் திருத்த மசோதாவால் எந்தவிதமான எதிர்மறையான பாதிப்பும் ஏற்படாது. 

அரசியல் காரணங்களுக்காக சிலர் குடியுரிமைத் திருத்தசட்டம் தொடர்பாக தவறான கருத்துக்களை உருவாக்கி வருகின்றனர். அந்த தவறான கருத்துக்களை நீக்க இளைஞர்கள் உதவ வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்