இதை ப.சிதம்பரம் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்படடு திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடந்த 16-ம் தேதி 74-வது பிறந்தநாளாகும். அன்றைய தினம் அவரை சிறையில் சென்று அவரின் குடும்பத்தினர் சந்தித்தனர். தனது பிறந்தநாளையொட்டி ட்வி்ட்டரில் குடும்பத்தினர் சார்பில் வாழ்த்துச் செய்தியையும் சிதம்பரம் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையி்ல் சிதம்பரத்தின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

தன் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று பிரதமர் மோடி செப்.16ம் தேதி எழுதிய கடிதத்தை ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?

தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று ப சிதம்பரம்  தெரிவித்துள்ளார்