மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைய உள்ளது. 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

தேர்தல் நடந்த 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 94 மற்றும் மற்ற கட்சிகள் 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை விட அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. 

பாஜகவை கடுமையாக எதிர்த்த கட்சிகளில் திமுகவை தவிர தேசிய அளவில் மற்ற அனைத்து பிராந்திய கட்சிகளும் மண்ணை கவ்வியுள்ளன. பிரதமர் மோடிக்கும் பாஜக ஆட்சிக்கும் எதிராக அதிகமாக கூக்குரலிட்ட சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பாஜகவை வீழ்த்த கூட்டணி அமைத்த அகிலேஷ்-மாயாவதி ஆகியோர் பாஜகவிற்கு கிடைத்துள்ள மக்களின் அங்கீகாரத்தை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 19 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மம்தாவிற்கு கடும் சவால் அளித்துள்ளது பாஜக. உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்ந்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி மண்ணை கவ்வியுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக 58 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அகிலேஷ் - மாயாவதி கூட்டணி வெறும் 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

அதேபோல அண்மையில் பாஜக ஆட்சியை இழந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் மக்களவை தேர்தலில் கெத்து காட்டி மீண்டும் அந்த மாநிலங்களில் கொடி நாட்டியுள்ளது. 

இவ்வாறு பாஜகவை வீழ்த்த நினைத்த அனைத்து கட்சிகளுமே வீழ்ந்துவிட்டன. ரஜினிகாந்திடம் ஒரு பேட்டியில், அனைத்து கட்சிகளும் பாஜக ஆட்சியையும் மோடியையும் எதிர்க்கின்றனவே? என்று கேட்டதற்கு, அனைவரும் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், யார் பலசாலி? என்று மோடிதான் பலசாலி என்பதாக பதிலளித்தார். ரஜினிகாந்தின் அந்த கூற்று கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. 

ஆனால் ரஜினிகாந்த் சொன்னது தான் நடந்துள்ளது. மோடி பலசாலி என்று ரஜினி சொன்னதுதான் இன்று நடந்துள்ளது. ரஜினி சொன்னதை போலவே தான் ஒரு பலசாலி தான் என்பதை மோடி, இந்த தேர்தலில் நிரூபித்துவிட்டார். அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகள் எதிர்த்தும் கூட பாஜகவை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.