தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். பீட்டா அமைப்பு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

குறிப்பாக கடந்த 3 நாட்களாக, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மணவிகள் களம் இறங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், வணிகர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், பல்வேறு சமூக நல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.

இதையொட்டி நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், போலீசார் சமரசம் பேசினர். அப்போது, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு விவகரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக டெல்லி சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மோடியை சந்தித்தார்.

அப்போது, “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்த பின்னரே இதுபற்றி முடிவு எடுக்கப்படும. அதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவசர சட்டம் இயற்றுவது முடியாத காரியம்” என மோடி கூறியதாக தெரிகிறது.எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீடித்து வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அவசர சட்டம் இயற்ற முடியாத என பிரதமர் மோடி கூறியிருப்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.