Modi is our friend only

அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி நண்பர் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருவதாகவும் ஆனால் அப்படி இல்லை எனவும் தெரிவித்தார். 

மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தமிழ்தேச தீவிரவாதிகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் இது தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தெளிவாக தெரிந்தது எனவும் தெரிவித்தார்.

ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர் என குறிப்பிட்டார் பொன்னார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் எனவும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார். 

இவ்வாறு அடிக்கடி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே அணிகளை இணைத்தேன் எனவும் எனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் தெரிவித்தார். 

இதன்மூலம் மோடியே எங்கள் பக்கம்ன்னு சொல்லாம சொல்லியுள்ளார் பன்னீர்செல்வம்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்த போது, சட்டசபையில் ஜெ.வின் படத்திறப்பு விழாவிற்கு ஏன் பிரதமர் மோடியை அழைக்கவில்லை?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ "அதிமுக பொறுத்தவரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு தந்தையும், தாயும் போன்றவர்கள். பிரதமர் மோடி எங்களுகு நண்பர் மட்டுமே" எனக் கூறினார்.