Asianet News TamilAsianet News Tamil

தனது எஜமானர்களான அம்பானி, அதானிக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் மோடி அரசு.. வெளுத்து வாங்கும் வேல்முருகன்.!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Modi government boosting the economy of corporate bosses..velmurugan
Author
Tamil Nadu, First Published Oct 29, 2021, 10:45 AM IST

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்கள் வரி திணிப்பை அதிகரித்து, அம்மக்களை நடுத்தெருவில் நிற்க வைக்க முயன்று வருகிறது ஒன்றிய அரசு என வேல்முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 15.74 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது. டீசல் விலை 15 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது. 164 நாட்களில் 66 முறையாக டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது. 70வது முறையாக பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது. தினமும் 30 பைசா, 20 பைசா என்ற அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏழை எளிய மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்மருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், தவறான நிர்வாகத்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

 குறிப்பாக, 2014 - ஆம் ஆண்டில், பெட்ரோல் மீது ரூ.9.20 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி, 2021ல் ரூ. 32.90 ஆக உயர்த்தியிருக்கிறது. அதேபோன்று, 2014 - ல் டீசல் மீது ரூ.3.46 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி,  2021ல் ரூ.31.80 ஆக உயர்த்தியிருக்கிறது. மோடி பதவியேற்ற கடந்த 7 ஆண்டுகளில் மட்டும்  பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் ஒன்றிய அரசின் வரியை உயர்த்தியிருக்கிறது. இந்த வரி விதிப்பின் வாயிலாக, பல லட்சம் கோடிகளை சுருட்டிய ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து இருக்கிறது. 

அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக வரியை குறைத்த ஒன்றிய அரசு, 15 விழுக்காட்டு வரி இழப்பை சரி செய்ய, பெட்ரோல், டீசல் விலையில் கலால் வரியை திணித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், வேலை இழப்பு, வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்கள் வரி திணிப்பை அதிகரித்து, அம்மக்களை நடுத்தெருவில் நிற்க வைக்க முயன்று வருகிறது ஒன்றிய அரசு. 

அதள பாதாளத்தில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்காமல், தனது எஜமானர்களான அம்பானி, அதானி  உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் மட்டுமே மோடி அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. எனவே, பெட்ரோல், டீசல் உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புரிந்துக்கொண்டும், பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios