புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு  பிரதமர்  மோடி நேற்று இரவு விருந்தளித்தார். இதில் புதிய எம்.பி.க்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் அழைப்பிதழ் அனுப்பியிருந்தது. இதையேற்று, இந்த விருந்தில் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். 

அதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக எம்.பி. கனிமொழி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பாஜகவில் சேர்ந்த 3 தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இந்த விருந்தின்போது தமிழக எம்.பி.கனிமொழி மோடி அமர்ந்திருந்த மேஜையில் நேருக்கு நேர் அமர்ந்து விருந்து உண்டார். அப்போது இருவரும் சகஜமாக பேசியது மற்ற எம்.பி.க்களை ஆச்சரியப்படுத்தியது.


.
நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களையும் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அறிந்து கொள்வதற்காக இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அலுவல் ரீதியாக அல்லாமல் சாதாரணமாக எம்.பி.க்கள் உரையாடினர். மேலும் தங்களது செல் போனில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில், விருந்து நிகழ்ச்சியில் எம்.பி.க்களுடன் நேரத்தை கழித்தது மகிழ்ச்சியளித்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.