கடந்த சில நாட்களாகவே மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையில் சூழல் சுகமாக இல்லை. வெளிப்படையாகவே சொல்வதென்றால் மோடி - அமித்ஷா இருவருக்கும், எடப்பாடியார் மற்றும் பன்னீர்செல்வம் மீது கடும் காட்டம். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தங்களின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் பி.ஜே.பி. அரசை பற்றி மிக கடுமையான விமர்சனங்களை அ.தி.மு.க. வைத்ததுதான். 

இந்த விமர்சன விபரங்கள், தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் மற்றும் உளவுத்துறை வாயிலாக மோடி மற்றும் அமித்ஷாவின் கவனத்துக்கு சென்றன. இதனால் அரசு மற்றும் அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவுகளையும், நெருக்கடிகளையும் சந்திக்க துவங்கியுள்ளனர் தமிழகத்தின் இரு முதல்வர்களும். 

குறிப்பாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய மூவாயிரம் கோடி நிதியை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது. இப்போது இந்த நிதி வருமா? எனுமளவுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாம். இரண்டு நாட்களுக்கு முன் தமிழக உள்ளாட்சி துறை அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளிடம் இது பற்றி பேசியபோது நெகடீவ் மற்றும் நக்கல் கமெண்டுகள் வந்து விழுந்தனவாம்.

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி மீது வெடித்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி ‘ஏன் இந்த பணத்தை ரிலீஸ் பண்ணினா அதுலேயும் கை வைக்கலாமுன்னு நினைக்கிறீங்களா?’ என்ற  அளவுக்கு டெல்லி லாபி கிண்டலடித்ததாம். இதற்கு தமிழக அதிகாரிகள் சீரியஸாக ரியாக்ட் செய்ய, ‘ஜஸ்ட் ஃபன்’ என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்களாம். 

அதேபோல் மத்திய தொகுப்பில் இருந்து தினமும் 6200 மெகாவாட் மின்சாரம் ஒடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது அதை 3400 ஆக குறைத்துவிட்டனராம். இதேபோல் பல துறைகளில் தமிழ அரசுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், உரிமைகளில் சரசரவென மத்தியரசு கைவைத்துவிட்டது என்கிறார்கள். 

மின்சாரத்தில் கை வைத்தால் தொடர் மின்வெட்டு நிகழ்ந்து, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு மீது கடும் ஆத்திரம் பொங்கும். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இது உச்சம் தொட்டால் அக்கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கூட கிடைக்காது. இதை இதைத்தான் விரும்புகிறதாம் பி.ஜே.பி.! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.