யார் முதல்வராக வந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். நான் முதல்வரானால் நேர்மையாகவே இருப்பேன் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். 
அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் கமல் பேசும்போது, “நம்மை பொறுத்தவரை புத்தரும் ஒன்றுதான். கலாமும் ஒன்றுதான். நாம்தான் இரண்டும் வெவ்வேறு என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். என் வாழ்க்கையில் அப்துல் கலாமிடம் 3 மணி நேரம் பேசியது பெரும் தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அந்த கலாம் கண்ட கனவை நனவாக்கவும் மாற்றத்தை நிகழ்த்தவும் மாணவர்களை அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் இன்னும் ஏன் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்?
குப்பையும் சாக்கடையும் இருக்கும் இடத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டும். அதுபோலவேதான் அரசியலும். அரசியல் இறங்கி மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும். யார் முதல்வராக வந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். நான் முதல்வரானால் நேர்மையாகவே இருப்பேன். முதல்வரானவுடன் என்னுடைய முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயமே. ஆனால், நீண்டகால தீர்வு சொல்வேன்.” என்று கமல் பேசினார்.