வெளி மாநில தொழிலாளார்கள் விஷயத்தில் பால்கனி அரசாங்கம் களத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் வேலைசெய்துவரும் வெளி மாநில ஏழைத் தொழிலாளர்கள் ஏப்ரல் 14ம்  தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிடும். பிறகு சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால், ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மும்பையில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி பாந்த்ரா  ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடினர். கொரோனா அபாயம் மகாராஷ்டிராவில் அதிகம் உள்ள நிலையில், தொழிலாளர்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. ஏற்கனவே டெல்லியிலும் இதேபோல கூட்டம் கூடி கால் நடையாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கினர். கையில் காசும் இல்லாமல் செல்வதற்கு வழியும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவை இதுபோன்ற அமைப்புச் சாரா  தொழிலாளர்கள் ஒவ்வொரு பெரு நகரங்களிலும் இன்னல்களை அனுபவித்துவருகிறார்கள். இந்நிலையில் அமைப்புச்சாரா தொழிலார்களின் நிலை குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “பால்கனியில் உள்ளவர்கள் களத்தில் நிகழும் நீண்ட மற்றும் கடினமான சூழலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் டெல்லியிலும், இப்போது மும்பையிலும் அது நடந்துள்ளது. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது டைம் பாம் போன்றது. கொரோனாவைவிட பெரிய நெருக்கடியாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் களத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.