புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் சுமூகமாக செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழகம்-கர்நாடகம் இடையே 40 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இருமாநிலங்ககிடையே இருந்த  நல்லுறவு பாதிக்கப்பட்டது. இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி பிரச்சினை எழும் போதெல்லாம் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு இரு மாநிலங்கள் இடையே நல்லிணக்கம் மற்றும் சுமூக நிலை இல்லாததே காரணம். இதற்கான முயற்சிகளில் எந்த அரசியல் தலைவர்களும் ஈடுபடவில்லை.

இதனிடையே  மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதலமைச்சரை  சந்தித்து பேசுவேன் என்று அறிவித்தார். கர்நாடக மக்கள்  தண்ணீர் என்ன ரத்தத்தையே தர தாயராக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக  குமாரசாமி பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.சோனியா, ராகுல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார். முதலமைச்சர்  குமாரசாமியையும் தனியாக சந்தித்து பேசினார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  சித்தராமையா கமல்ஹாசனை வரவேற்று அவர் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு சகஜமாக பழகினார். கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தமிழர்-கன்னடர் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர்  குமாரசாமியை மீண்டும் சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்தார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதினார். அதை ஏற்று குமாரசாமி இன்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதில் அனுப்பினார்.

இதை ஏற்று நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் பெங்களூர் சென்றார். இரவு ஓட்டலில் தங்கினார். இன்று அவர் பெங்களூரில் முதலமைச்சரின்  அதிகாரப்பூர்வமான கிருஷ்ணா இல்லம் சென்றார். அவரை குமாரசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார்.

தொடர்ந்து  இருவரும் 20 நிமிடங்கள் வரை காவிரி பிரச்சனை குறித்து பேசினர். இதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டது. இனி இரு மாநிலங்களும் அதை செயல்படுத்தும் படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமல் தெரிவித்தார்.

இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்றும்  கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் பிரச்சனையைத் தீர்த்து கொள்ள வேண்டும்  என்றும் கமல் தெரிவித்தார்.

காவிரி பிரச்சனை இன்று நேற்று வந்ததல்ல. 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை உள்ளது. கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் திரையிடுவது பற்றி எதுவும் பேசவில்லை என்றார். தான் தமிழ்நாட்டு பிரதிநிதியாக கர்நாடகம் வந்துள்ளதாகவும் கமல் கூறினார்.

முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி பேசுகையில், காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருந்தார். இதனிடையே தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் காவிரி பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் இருக்கும் போது கமல் ஏன் தேவையில்லாமல் குமாரசாமியை சந்திக்க வேண்டும் என சர்ச்சை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு கமல் ஸ்கோர் செய்துவிட்டார் என்று அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.