சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இலவசமாக மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்தி தரும் முயற்சியில் இறங்கியுள்ளது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி.
கோடையில் தொடங்கி சென்னையில் கடும் தண்ணீர்ப் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் பொய்த்துப்போனதால், அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். லாரி தண்ணீரின் விலையும் கண்டபடி உயர்த்தப்பட்டுவிட்டதால், தண்ணீருக்காகக் கண்ணீர் விடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சிகள் இலவசமாக மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. 
 அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வீடுகள் தோறும், இலவச மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைத்து தர களத்தில் இறங்கியுள்ளனர். இதன்படி முதல்கட்டமாக சென்னையில் வளசரவாக்கத்தில் இந்தப் பணியைத் தொடங்க உள்ளனர். கட்சியின் சென்னை மண்டல பொறுப்பாளர் கமீலா நாசர் தலைமையில் இப்பணி நடக்க உள்ளதாகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்பதால், தண்ணீரைச் சேமிக்க வசதியாக ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க கமல்ஹாசன் விரும்பியதால் இந்தப் பணி தொடங்கப்படுவதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக இந்தப் பணியை செய்து தர இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யத்தினர் தெரிவித்துள்ளனர். 
மழை நீர் கட்டமைப்பை தங்கள் வீட்டில் ஏற்படுத்த விரும்புவோர் அதற்கான அனுமதியுடன் 2 அடி அகலம் 4 அடி நீளமுள்ள இடவசதியும் அளித்தால் இலவசமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி தருவோம் என்கிறார்கள் மக்கள் நீதி மய்ய கட்சியினர். விருப்பமுள்ளவர்கள் 98415 31567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாமே!