தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு கட்சியும் தயாராகிவருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தரப்பில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட தேர்தல் அறிக்கையில் வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை அறிவித்த கையோடு தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்யம் தொடங்கியுள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளது. பெண்களைக் கவரும் வகையிலான திட்டங்கள், விவசாய திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்கிடையே தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது. இதன்படி சில கேள்விகளைப் பொதுமக்களிடம் கேட்டு விண்ணப்படிவம் வழங்க  திட்டமிட்டுள்ளனர்.  அந்த விண்ணப்ப படிவத்தில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று கருத்துக் கேட்க உள்ளனர்.

 
திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை குறித்து கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யமும் அதே பாணியில் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது.