ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தமிழக முதலமைச்சரானார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிமுக எம்எல்ஏக்கள் அவரை குறைந்தது ஒரு 5 நிமிடமாவது புகழ்ந்து பேசிவிட்டுத்தான் தாங்கள் பேச வந்த பிரச்சனை குறித்து விளக்குவார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்எல்ஏக்கள் தன்னை புகழ்ந்து பேசுவதை ஜெயலலிதாவும் விரும்பி ரசிப்பார்.ஆனால் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரையும் அவர்கள் சட்டப் பேரவையில் மட்டுமல்ல வேறு எங்கும்கூட புகழ்ந்தது கிடையாது.

புகழ் வெளிச்சம் அத்தனையும் ஜெயலலிதா மீது மட்டுமே பாயும். இந்த நடைமுறை ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. அவர் மறைந்த பிறகு அதிமுக எம்எல்ஏ க்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை வானளாவிய அளவில் புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சசிகலா மீது மட்டும் பாய்ச்சப்பட்டு வந்த புகழ் வெளிச்சம் தற்போது முதலமைச்சர் ஓபிஎஸ் பக்கமும் திரும்பியுள்ளது. தற்போது அவருக்கென ஒரு ஆதரவு எம்எல்ஏ க்கள் குழு உருவாகியுள்ளது.

அவர்கள் தற்போது சட்டப் பேரவையில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவை புகழ்வதுடன் முதலமைச்சர் ஓபிஎஸ் ஐயும் வெகுவாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

நேற்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஈரோடு கிழக்கு அதிமுக எம்எல்ஏ, கே.எஸ். தென்னரசு, வழக்கம் போல் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் புகழ்ந்து பேசிவிட்டு, ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ்ஐ வணங்கிவிட்டு எனது பேச்சைத் தொடங்குகிறேன் என்றார்.

இதுவரை அதிமுக வில் ஜெயலலிதா, சசிகலா போன்றவர்கள் மேல் மட்டுமே பாய்ந்த புகழ் வெளிச்சம், புதிதாக ஓபிஎஸ் மேலும் பாயத் தொடங்கியுள்ளது. ஓபிஎஸ் க்கென தனி ஆதரவு எம்எல்ஏ க்கள் உருவாகியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.