நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தொகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.இதனால் அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

சசிகலா அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் கடந்த சில நாட்களாக தங்கவைக்கபட்டிருந்தனர். அங்கு இருந்து தப்பித்து வந்த சில எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் ஓ.பி.எஸ்க்கு ஏராளமான பொதுமக்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் ரிசார்ட்டில் இருந்து தப்பித்து வந்த எம்.எல்.ஏக்கள் தங்களை கடத்தி கொண்டு போய் அடைத்து வைத்திருந்ததாகவும், இன்னும் ஓ.பி.எஸ்க்கு ஆதராவான எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பினர் அடைத்து வைத்திருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சில எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டுக்கு வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் தாங்கள் அடைத்து வைக்கபடவில்லை சுதந்திரமாகதான் உள்ளோம் என தெரிவித்தனர்.

இதனிடையே சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கபட்டார்.

பின்னர், பொதுமக்களும், இளைஞர்களும், நெட்டிசன்களும் அனைத்து எம்.எல்.ஏக்களின் தொலைபேசி எண்களை கண்டறிந்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்குமாறு எம்.எல்.ஏக்களை வலியுறுத்தினர்.

ஆனால் எம்.எல்.ஏக்கள் சிலர் தொகுதிவாசிகளை திட்டிவிட்டு செல்பேசி இணைப்பை துண்டித்து விட்டனர்.

ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று கொண்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்ததால் அதற்கான சிறப்பு சட்டபேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பல்வேறு அமளிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தொகுதிவாசிகளும் பொதுமக்களும் எம்.எல்.ஏக்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றனர். பல்வேறு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தொகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

மத்தளமாக இருந்தால் இரண்டு பக்கமும் அடிவாங்க வேண்டும் என்பது தான் தற்போது எம்.எல்.ஏக்களின் நிலைமை...