MLAs disqualification verdict soon said high court chief justice

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, முதல்வருக்கு எதிராக வாக்கலித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள், தங்களது தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், நேற்று 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக, தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதி அமர்விடம் முறையிட்டார். அப்போது, 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, எந்த வழக்கை எப்போது விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் எனவும் இதுபோன்று நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதுதொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.