MLA Vijayadharani slams TN assembly speaker

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, தனது தொகுதியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

தொடர்ந்து காங். எம்.எல்.ஏ. விஜயதரணி பேசிக் கொண்டே இருந்தார். அப்போது சபாநாயகர் தனபால், நீங்களும் அமைச்சரும் தனியாகப் பேசிக் கொண்டீர்களா?
என கேட்டுள்ளார்.

சபாநாயகரின் இந்த பேச்சால் ஆவேசம் அடைந்த விஜயதரணி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகரின் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் எம்.எல்.ஏ.க்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

இதன் பிறகு எம்.எல்.ஏ. விஜயதரணி, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது தொகுதியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு கேட்ட தன்னை, உள்நோக்கத்தோடு அவைக் காவலர்களைக் கொண்டு, தள்ளிக்கொண்டுபோய் முறைகேடாக உடம்பில் எல்லாம் அடிபடும் நிலைக்கு கையில், வயிற்றில், நெஞ்சில் கையை வைத்தும் புடவையைப் பிடித்து இழுப்பது போன்ற அநாகரிகமான செயல்பாடுகளில் இந்த அவையில் இருப்பவர்கள் ஈடுபட்டு அவைக்காவலர்களால் வெளியேற்றம் செய்கிறார்கள்.

பெண் எம்.எல்.ஏ. என்றுகூட பாராமல் மிக மோசமாக இன்றைக்கு சபாநாயகர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. நீங்களும்
அமைச்சரும் தனியாகப் பேசிக் கொண்டீர்களா? என்றெல்லாம் சபாநாயகர் கேட்கிறார்.

ஒரு பெண் எம்.எல்.ஏ.வைப் பார்த்து ஒரு சபாநாயகர் கேட்கிற கேள்வியா இது? ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்து இங்கே மக்களுக்காகப் போராட நாங்கள்
வந்திருக்கிறோம். என்னைப் பார்த்து சபாநாயகர் இந்த கேள்வியைக் கேட்கிறார். இப்படி அசிங்கப்பட்டு இந்த அவையில் நாங்கள் செயல்பட வேண்டுமா? தனியாக
பேசிக் கொள்கிறீர்களா? என்று ஆவேசமாக கூறினார்.

தனியாக பேசிக் கொள்கிறீர்களா? என அவமானப்படுத்துவது வேறு யாரும் அல்ல... சபாநாயகர்தான். இந்த அசிங்கத்துக்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என்று விஜயதரணி கூறினார்.