MLA Vagaai Chandrashekhar condemns Vijayakanth
திமுக தலைவர் கருணாநிதியை தான் பார்க்க மு.க.ஸ்டாலின் அனுமதிக்கவில்லை என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி நடத்தியிருந்தால் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன் என்றும் விஜயகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகரன், விஜயகாந்த் கூறியிருப்பது பச்சை பொய் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ., வாகை சந்திர சேகர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக தலைவர் கருணாநிதியை பார்க்கவிடாமல் மு.க.ஸ்டாலின் என்னைத் தடுத்தார் என்ற அபாண்டமான பழியை, பச்சை பொய்யை கடந்த 24 ஆம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான பேட்டி ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி விஜயகாந்த் வாயால் கூறப்பட்டதா? அல்லது வேறு ஒருவருடைய காழ்ப்புணர்ச்சியின் வெறி அவரது வாயிலாக வெளிப்பட்டதா? விஜயகாந்தின் இயலாமையைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய் கக்கியது யார் என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதியை பார்க்கவிடாமல் ஸ்டாலின் தடுத்தார் என நா கூசாமல் விஜயகாந்த் பேசியுள்ளார். என்னுடைய மனசாட்சி ஸ்டாலினை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மனசாட்சியில் விஜயகாந்த் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறார். ஸ்டாலின் எப்போதும் விஜயகாந்தை விரும்பியதும் இல்லை; வெறுத்ததும் இல்லை. அவரின் பொதுவாழ்வின் அரசிய்ல பயணத்தில் புலிகளையும் புல்லுருவிகளையும் கடந்து செல்கிறார்.
கவரிமானை காட்டுப்பூனைக்குப் பிடித்தால் என்ன? பிடிக்காவிட்டாலும்தான் என்ன? காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, ஸ்டாலினை துதிபாடுவதை தவிர வேறு எதுவும் அங்கே நடக்கப் போவதில்லை. அவர் என்ன கருணாநிதியா? ஸ்டாலின் வேண்டுமானால் தன்னை கருணாநிதி என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அது உண்மையல்ல என்று விஜயகாந்த் உளறிக் கொட்டியுள்ளார்.
கருணாநிதியை மாபெரும் தலைவர்கள், தமிழ் பேரறிஞர்கள் பாராட்டி புகழ்ந்து பேசியதை ஏற்றுக் கொண்டதைப்போல விஜயகாந்தின் பாராட்டுதலையும் புகழ்ச்சியையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், ஸ்டாலினுக்கு புகழ்ச்சி என்பது பிடிக்காத ஒன்று. விஜயகாந்தின் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை புகழ்ச்சி. ஸ்டாலினை திமுகவினர் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள், எதிர்கட்சி நண்பர்கள், ஒட்டுமொத்த உலக தமிழர்கள் கருணாநிதிக்குப் பறிகு நாகரிக அரசியல் தலைவர் என ஏற்று கொண்டார்கள்.
சினிமாவில் கதாநாயகனுக்கு மார்க்கெட் போனால் மார்க்கெட்டில் உள்ள கதாநாயகியும், இசையமைப்பாளரையும், இயக்குநரையும் இணைத்து மீண்டும் வெற்றி பெறுவது சினிமா பாணி. அதைப்போலவே அரசியலில் மார்க்கெட் போகாமல் இருக்க மக்களின் மனதில் நிலைத்திருக்கும் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, இழந்த அரசியல் மார்க்கெட்டைப் பிடிக்க விஜயகாந்த் நினைக்க வேண்டாம். சினிமா வேறு அரசியல் வேறு. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்று அந்த அறிக்கையில் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
