அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த எம்.எல்.ஏ. பிரபு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருவதால் டி.டி.வி.தினகரன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். அமமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு செயல்பட்டு வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டி.டி.வி. தினகரன் கட்சி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தொடர்ந்து அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து, அமமுகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் தப்பியது. இதனையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு அறந்தாங்கி ரத்தினசபாபதியும் விருத்தாச்சலம் கலைச்செல்வனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் தாய் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரத்தினசபாபதி விரைவில் பிரபுவும் அதிமுகவில் இணைவார் என்று தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் அணியில் இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், எம்.எல்.ஏ.குமரகுரு, முன்னாள் அமைச்சர் ப.மோகன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் முதல்வரை சந்தித்த நிலையில் தற்போது பிரபுவும் சந்தித்துள்ளார்.