வரும் தேர்தலில் அரசுக்கு எதிராகவே தனது செயல்பாடுகள் இருக்கும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். நான் பூச்சாண்டி காட்டவில்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் என்றும் கருணாஸ் கூறினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் அக்கட்சியின் தலைவரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்த பேச்சை அடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார், 
எம்.எல்.ஏ. கருணாஸ் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் 
அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது, காவலர் ஒருவரை தாக்கியதாக திருவல்லிக்கேணி போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்களில் இருந்து ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் குற்றவிய்ல நடுவர் நீதிமன்றத்தில் கருணாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் காலை 8.30 மணிக்கும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் 10.30 மணிக்கும் ஆஜராகி 30 நாட்கள் கையெபத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் கையெழுத்திட 3 நாட்களுக்கு விலக்குக் கோரி எம்.எல்.ஏ. கருணாஸ் நீதிமன்றத்தில் இன்று காலை மனு தாக்கல் செய்தார். அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் குரு பூஜையில் பங்கேற்க அனுமதி கோரி மனு அளித்தார். இந்த மனு மீதான விசாரணை பிற்பகல் 3 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டது.எம்.எல்.ஏ. கருணாசின் மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருவல்லிக்கேணி மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் கையெழுத்திடுவதற்கு விலக்களிக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. கருணாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் எந்த கட்சிக்கும் அப்பாற்பட்டவன்; தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி முடிவெடுக்கப்படும். வரும் தேர்தலில் அரசுக்கு எதிராகவே என்னுடைய செயல்பாடுகள் இருக்கும். நான் பூச்சாண்டி காட்டவில்லை; எப்போது வேண்டுமானாலும் கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் என்றார்.