பிரதமர் மோடி ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் தேர்தல் சமயத்தில் நீங்கள் கீழே இறங்கித்தானே ஆக வேண்டும் என்றும் கருப்பு கொடியை எதிர்கொள்ள பிரதமர் மோடி தயங்குவது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னையில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கருப்பு உடை அணிவோம் என்றும் வீடுகளில் கருப்புக் கொடி காட்டுவோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இன்று பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. நாகை அருகே சீர்காழியில் காவிரி உரிமை மீட்பு 6-ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின். அப்போது அவர் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்திருந்தார்.

இந்த நிலையில் கடலூர், சிதம்பரம் அருகே கடலாச்சேரியில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார். பிரதமர் மோடி வரும் நாள் நமக்கெல்லாம் துக்க நாளாக இருக்க வேண்டும். அதனை தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

தமிழகத்தை இருட்டாக்க கூடிய சூழ்நிலையில் மோடி அரசு ஈடுபடுகிறது என்றும் அதற்கு தமிழக அரசு துணை போகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அப்போதைய பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்டப்பட்டது. தமிழகம் சார்பில் நடத்தப்பட்ட கருப்பு கொடி கண்டனத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கருப்பு கொடி கண்டனத்தை மோடி, நான் சந்திக்க தயார் என்று கூறியிருக்க வேண்டும்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவிடந்தைக்கு தூரம் என்பதால் ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், விமான நிலையத்தில் இருந்து சில நிமிட தூரமே ஆன கிண்டி செல்வதற்கு ஹெலிகாப்டரில் மோடி சென்றுள்ளார்.

ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தால், தேர்தல் வரும்போது நீங்கள் கீழே இறங்கித்தானே ஆக வேண்டும். உயர உயர பறவைகள் பறந்து கொண்டிருந்தாலும், இரை தேடி கீழறிங்கித்தானே ஆக வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கம் வரை போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.