Asianet News TamilAsianet News Tamil

அவர் என்னைக் கடத்தியதாக சொல்வது பொய்... செயல் தலைவர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாமா? பழைய கதைய சொன்ன பாத்திமா பாபு...!

M.K.Stalin never kidnap me - Fathima Babu
M.K.Stalin never kidnap me - Fathima Babu
Author
First Published Apr 26, 2018, 3:30 PM IST


செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் தன்னை கடத்தியதாக சொல்லப்படுபவை உண்மையில்லாதவை என்றும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் பாத்திமா பாபு கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு, தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டினார் என்ற வதந்தி பல வருடங்களாக உலவி வருகிறது. அந்த வதந்திக்கு இதுவரை பெரிய அளவில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தார் பாத்திமா பாபு. தற்போது அந்த வதந்திக்கு பாத்திமா பாபு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது குறித்து பாத்திமா பாபு கூறுகையில்: என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்த காலக்கட்டத்தில் இது குறித்து, அப்போதே குமுதம் இதழுக்கு விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால் நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒரு முறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராக காண முடியாத
காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்.

சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்தேன். திருமணத்துக்கு முன்பே என் கணவரான பாபு தான், என்னை தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தார்.

அப்படியிருக்கையில், இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது? பரப்பப்பட்டது என்றே எனக்குப் புரியவில்லை. இது குறித்து என்னிடம் விசாரிப்பவர்களுக்கு மேலே சொன்ன காரணத்தைத்தான் கூறி வருகிறேன். அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. ஆனால், ஒரு கட்சியின் செயல் தலைவராக உள்ளவரின் கேரக்டரை
கொலை செய்வது தவறு. 

நான் விளக்கம் அளித்த பிறகும், சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பார்களே ஆனால், அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை; அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதைவிட்டு விட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதைப் போல மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப்பற்றி கேள்வி
வந்தால் பதில் சொல்வதாக இல்லை என்று பாத்திமா பாபு விளக்கமளித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios