M.K.Stalin condemned - Pressmeet

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது அவரிடம் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்து மனு ஒன்றை அளித்தார். இதன் பின்னர், ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம். ஒக்கி புயல் பாதிப்பை சரி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்க ஆவண செய்வதாக ஆளுநர் உறுதி அளித்தார். கேரளாவில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிவாரண பணிகளில் 10 சதவீதமாவது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். மனுவை பிரதமர்
மோடிக்கு அனுப்ப உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இதனால் எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

ஒக்கி புயல் ஓய்ந்து 15 நாட்கள் முடிந்த நிலையில், பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேரில் சந்திக்கவில்லை என கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஒக்கி புயலால் பயிர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புயல் பாதிப்பை சரி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளும் புயல் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. வீடுகள், உடைமைகள் இழந்தவர்களுக்கு இழப்பீடுகள் அளிப்பது குறித்த கணக்குகள் இதுவரை எடுக்கவில்லை. 

நேற்றுதான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி சென்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றாரா? பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாரா? என்ற செய்திகள் கிடையாது. அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்போல, அங்கு ஒரு கூட்டத்தில் பேசி அறிவிப்புகளை வெளியிட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஏன் முதலமைச்சர், கன்னியாகுமரிக்கு வர வேண்டும. சென்னையில் இருந்தே அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாமே என்கின்றனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பல கோடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண பணி திட்டங்களும் அமைந்துவிடக் கூடாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் செல்லவில்லை என்றார் ஸ்டாலின்.

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆய்வு மேற்கொண்டு வருவது குறித்து, பேசியிருக்கலாமே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்பதில் கருத்து மாறுபாடு கிடையாது. அரசு செயல்படாத நிலையில், ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் அவரை சந்தித்தோம்.

சென்னை, காவல் ஆய்வாளர், ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 2 பேர் மட்டும்தான் அனுப்பி உள்ளனர். உயர் அதிகாரி தலைமையில் பலரை அனுப்பியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தாருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.