கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் போனில் நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். மேலும், அமைச்சர் கே.பி அன்பழகன் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன் தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டார்.  இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உள்ளிடோரும் கலந்துகொண்டனர்.

நேற்று முதல்வரை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மின்விசை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையை கொரோனா நிவாரணமாக வழங்கிய நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் தங்கமணியை போனில் தொடர்பு கொண்ட எதிர்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.  

இதுகுறித்து அவர், ‘’தங்கமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.