MK Stalin upset after kanimozhi press meet in Delhi

ஸ்டாலினும், கனிமொழியும் கருணாநிதியின் பிள்ளைகள்தான் என்றாலும் கூட இருவருக்குள்ளும் அதிகார போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஸ்டாலினின் அரசியல் கட்டுப்பாட்டினுள்தான் கனிமொழி வலம் வர முடிந்தது. இந்நிலையில் 2ஜி வழக்கு தீர்ப்புக்குப் பின் கனிமொழி வெடித்து வெளியே வர துவங்கியிருப்பது ஸ்டாலினை அதிர வைத்துள்ளது. 

தி.மு.க.வின் விஸ்வரூப வளர்ச்சிக்கு ஸ்டாலினின் பங்கு மிகப்பெரியது என்கிற கருத்தில் சமரசமே கிடையாது. அவர் துவக்கிய இளைஞரணிதான் அக்கட்சிக்கு பல இக்கட்டான தருணங்களில் கைகொடுத்து காத்தது. கருணாநிதி நடக்கமுடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்த போதும், பின் செயல்பாடு முற்றிலும் குறைந்து கோபாலபுரத்தில் முடங்கிவிட்ட பின்னரும் செயல்தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஸ்டாலின் அக்கட்சியின் மீள்வுக்காக ராப்பகலாய் உழைப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. 

இப்படியிருக்க, அக்கட்சியில் கனிமொழியின் வளர்ச்சியை ஒரு கட்டுக்குள்தான் வைத்திருந்தார் ஸ்டாலின். பெண் என்பதால் எளிதாக மக்களின் பரிதாபம் மற்றும் அபிமானத்தை பெற்று முன்னேறி முதல்வர் பதவி வரை அடைந்திடுவார் என்று ஸ்டாலினுக்கு மிக பர்ஷனால வட்டத்தினர் பயந்ததே தன் தங்கை மீது ஸ்டாலின் ஒரு கண்ணுக்கு புலனாகாத வேலிகளை அமைக்க காரணமாக இருக்கிறது. 

இந்நிலையில் தன் மீது விழுந்த ஸ்பெக்டரம் வழக்கு வெகுவாய் அழுத்தியதால் ‘தீர்ப்பு வரட்டும்’ என்று இதையெல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தார் கனிமொழி. 

இந்நிலையில் இன்று அவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் அவர் விடுதலையாகிவிட்டார். பாசிடீவான தீர்ப்பை எதிர்பார்த்தோ என்னவோ மிக தயாராய் டெல்லி சென்றிருந்தார் கனிமொழி. கறுப்பு நிற பார்டரில் சிவப்பு நிறத்து அவரது புடவை தி.மு.க.வின் கொடியை நினைவூட்டியது. இதுபோக மாஜி பெண் அமைச்சர்கள் உள்ளிட்ட மகளிரணி மாநில நிர்வாகிகள் அவருடன் இருந்ததும் அவருக்கான மிடுக்கை அதிகரித்தது. 

இந்நிலையில் இந்த வழ்க்கில் விடுதலையாகி நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய கனிமொழி, காரின் பக்கவாட்டில் ஏறி தன்னை எதிர்பார்த்திருந்த தொண்டர்களை நோக்கி கைகாட்டியது அவரது அரசியல் எழுச்சியை காட்டியது. 

இந்நிலையில் டெல்லியில் இருந்தபடி அறிக்கை வெளியிட்டிருக்கும் கனிமொழி, “என் மீதான பொய்க் களங்கம் போய்விட்ட நிலையில் இனி அரசியலில் முழு கவனம் செலுத்துவேன், கட்சியை பலப்படுத்துவேன். தமிழக மக்களுக்கு தொண்டாற்றுவேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார். 

தீர்ப்புக்குப் பின் டெல்லியில் கனிமொழிக்கு தன் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி ஸ்டாலினை அதிர வைத்துள்ளது. அதிலும் ‘கட்சியை பலப்படுத்துவேன்’ என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டியிருக்கும் அவரது நெருங்கிய கை ஒருவர் ‘அப்போ இப்ப நம்ம கட்சி இங்கே பலவீனமா கிடக்குது தளபதி? கனிம்மா கருத்துக்கு இதுதானே அர்த்தம்?’ என்று கேட்டிருக்கிறார். 

அழகிரியை அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்ட ஸ்டாலினுக்கு கனிமொழியின் எழுச்சி ஒரு புது தலைவலியே! எதிர்கட்சி எதிரிகளை ஒரு கையால் சமாளிக்கும் நேரத்தில் இந்த உட்கட்சி பங்காளிகளை இன்னொரு கையால் அடக்கி வைக்க வேண்டிய இக்கட்டில் ஸ்டாலின் இருக்கிறார்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.