தமிழக காங்கிரஸின் சமீப கால சென்சேஷன் என்னவென்றால் அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்து திருநாவுக்கரசரை வீழ்த்திய சம்பவம்தான்.

சரி, டார்கெட்தான் சக்ஸஸ்ஃபுல்லாக முடிந்துவிட்டதே இனியாவது கட்சி வேலையை குஷ்பூ பார்ப்பார்! என்று நினைத்தால் அவரோ அடுத்தடுத்து முரண்பாடுகளையும், பஞ்சாயத்துகளையும், பிரச்னைகளையும் உருவாக்க துவங்கிவிட்டார் வெளிப்படையாக என்று கட்சிக்குள்ளேயே வெடித்திருக்கிறது பெரும் கலகம். சமீபத்திய பேட்டி ஒன்றில் கருணாநிதியை சீண்டி குஷ்பு பேசிவிட, இது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் சிக்கலைக் கிளப்பிவிட, இதுதான் சாக்கு என்று ராகுலின் கவனத்துக்கு பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர். அரசரின் புகாரை வலுப்படுத்தும் விதமாக தி.மு.க.விடமிருந்தும் ராகுலுக்கு புகார் தாக்கீதுகள் வந்து சேர, ஒட்டுமொத்தமாக குஷ்பூ மீது கடும் கடுப்பாகி இருக்கிறார் ராகுல்.

 

 அப்படி என்ன பேசிவிட்டார் குஷ்பூ?... தமிழரல்லாத ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியலுக்கோ, முதல்வர் பதவிக்கோ வரக்கூடாது என்று சீமான் போன்றவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கருத்து கேட்டதற்கு...”கருணாநிதி தமிழர் கிடையாது. எம்.ஜி.ஆர். தமிழகத்தை சேர்ந்தவரில்லை, ஜெயலலிதா கர்நாடகத்தில் இருந்து வந்தவர். அப்படி இருக்கும்போது ரஜினியைப் பற்றி இப்படி பேசுவது தவறானது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். ஜாதி, மதம், தமிழன் என்றெல்லாம் பார்க்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! என்று சொன்னதும் தமிழகத்தை நோக்கித்தானே உலகம் கை நீட்டுகிறது. அப்படியானால் அவரால் இந்த மாநிலத்துக்கு பெருமைதானே? அவரை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாமே தவிர இப்படியெல்லாம் பேசக்கூடாது.” என்றிருக்கிறார். 

இந்த பேட்டியை பார்த்ததும் ஸ்டாலினுக்கு பற்றிக் கொண்டுவந்திருக்கிறது. தி.மு.க.வில் இருந்த காலத்திலேயே குஷ்புவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையில் நிறைய உரசல்கள், மோதல்கள். ஸ்டாலினை தவறாக பேசிவிட்டார் என்று திருச்சி விமான நிலையத்தில் குஷ்பூ மீது செருப்பை வீசினர் தி.மு.க.வினர். இத்தனைக்கும் அப்போது அவர் தி.மு.க.வில்தான் இருந்தார். ஸ்டாலின் உடனான மோதலினாலேயே தி.மு.க.வை விட்டு விலகிய குஷ்பு காங்கிரஸில் இணைந்தார். 

இப்போது காங்கிரஸில் இருந்து கொண்டு கருணாநிதியை நோக்கி ‘அவர் தமிழர் இல்லை’ என்று குஷ்பூ சொன்னதை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஒரு புகாரை அனுப்பிய கையோடு, ராகுலுக்கும் ஒரு புகாரை ஸ்டாலின் சார்பாக அனுப்பியுள்ளது தி.மு.க. என்கிறார்கள். அதில் “உலகமே முத்தமிழறிஞர், தமிழின தலைவர்! என்று  போற்றும் எங்கள் தலைவரை உங்கள் கட்சி நிர்வாகி இப்படி அசிங்கப்படுத்துகிறார். அதுவும் மறைந்த தலைவர் மீது இப்படி வதந்தியான விமர்சனத்தை வைப்பது மிக கேவலமான செயல். இப்படியொரு அவமரியாதையை தாங்கிக் கொண்டு அரசியலுக்காக உங்களோடு நாங்கள் ஒட்டி இருந்து கூட்டணி நடத்தத்தான் வேண்டுமா?” என்று காட்டமாக கேட்டிருக்கிறார்கள். 

இதைப் பார்த்து ராகுல் மிரண்டுவிட்டாராம். உடனடியாக கே.எஸ்.அழகிரியை அழைத்து விசாரிக்க, அவர் குஷ்புவிடம் விளக்கம் வாங்கியிருக்கிறார். குஷ்புவோ ‘நான் அப்பா மாதிரி நினைக்கின்ற, என்றும் என் தலைவரான கலைஞரை அப்படி பேசுவேனா? என் கருத்து எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.’ என்று புலம்பிக் கொட்டிவிட்டாராம். அழகிரி இதை ராகுலுக்கு அனுப்ப, ‘எடிட் செய்துதான் வெளியாகியுள்ளது, அப்படியொரு விமர்சனத்தை குஷ்பு சொல்லாமல் இல்லை அப்படித்தானே? இப்படியான நபர்களை இயக்கத்தில் வைத்திருந்த என்ன லாபம்? கூட்டணிக்கும், வெற்றிக்கும் குண்டு வைக்கும் குஷ்பூவை தூக்கி எரிந்தால் என்ன? விளக்கம் கொடுங்கள்.” என்று ராகுலின் அலுவலகத்திலிருந்து தகவல் வந்துள்ளதாம். 

ஆக குஷ்பூ கூடிய விரைவில் காங்கிரஸில் இருந்து கட்டம் கட்டப்பட்டாலும் ஆச்சரியமில்லை! என்கிறார்கள். ஆனால் இவ்வளவுக்கு பிறகும் வழக்கமான கெத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் குஷ்பூ, ‘வருவது வரட்டும் பார்த்துக்கலாம்’ என்றிருக்கிறாராம். என்னவோ போங்க சுந்தர்.சி!