திமுக தலைவரிடம் பேச வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வந்த போனை கூட அவரிடம் கொண்டு சென்று கொடுக்க முடியாத அளவிற்கு ஸ்டாலின் டென்சனில் உள்ளாராம்.

நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும், நாங்குநேரி இடைத் தேர்தலாக இருக்கட்டும் யாரும் எதிர்பாராத அளவிற்கு தாராளமாக நடந்து கொண்டது திமுக. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியதை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரால் கூட நம்ப முடியவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி செத்து சமாதிகட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் திமுக கொடுத்த 10 இடங்களில் ஒன்பதை வென்று காங்கிரஸ் தனது இருப்பை காட்டிக் கொண்டது.

இதே போல் நாங்குநேரி தேர்தலில் வென்ற ஆக வேண்டும் என்கிற நெருக்கடியில் அதிமுக இருந்த நிலையில் அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டிருந்தால் அக்கட்சிக்கு மேலும் நெருக்கடி கொடுக்கலாம் என்கிற ஒரு சூழல் இருந்தது. ஆனால் கூட்டணி தர்மத்திற்காக 2016 தேர்தலில் நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட்டு இருந்ததால் அந்த தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கியது திமுக. இந்த அளவிற்கு இரண்டு தேர்தல்களிலும் திமுக பெருந்தன்மை காட்டியது.

ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் நெருக்கடியால் காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை ஒதுக்க முடியவில்லை. இருந்தாலும் கூட காங்கிரசுக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் இடங்கள் காங்கிரஸ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இருந்தது. இதனால் திமுக மாவட்டச் செயலாளர்கள் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டனர்.

இதனால் ஏற்பட்ட கோபத்தில் திமுக கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடந்து கொண்டதாக அழகிரி – ராமசாமி இணைந்து அறிக்கை வெளியிட்டனர். வழக்கமாக இது போன்ற அறிக்கைகளை கூட்டணியில் இடங்களை ஒதுக்கும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பிறக ட்சிகள் வெளியிடுவது வழக்கம். ஆனால் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக என்று கூறியிருந்தது தான் ஸ்டாலினை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் என்னையே விமர்சிப்பார்களா? என கர்ஜித்துள்ளார் ஸ்டாலின்.

இந்த விஷயத்தில் நான் ஒன்றும் கலைஞர் இல்லை, கூட்டணி கட்சி என்ன பேசினாலும் பொருத்துக் கொள்ள என்றும் ஸ்டாலின் பிடிவாதமாக கூறியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் போன்றோர் ஸ்டாலினை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் ஸ்டாலின் அவர்களிடம் பேச முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி திரிசங்கு சொற்கத்தில் நின்று கொண்டிருக்கிறது.