திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் புதுச்சேரியில் அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விழுப்புரம் வழியாக புதுச்சேரி புறப்பட்டார். இதற்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரை மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஒரு போலீஸ் வாகனத்தில் சென்றனர்.

 

ஜீப்பை, ஆயுதப்படை போலீஸ், சரவணன் ஓட்டினார். நாராயணசாமியை சந்தித்த பின், ஸ்டாலின், இ.சி.ஆர்., வழியாக, சென்னை சென்று விட்டதால், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், ஜீப்பில் விழுப்புரம் புறப்பட்டனர். விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடி ஜீப் வந்துக்கொண்டிருந்தது.

 

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையின் வலதுபுறத்தில் சென்றது. அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற, 'டி.வி.எஸ்., அப்பாச்சி, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்குகள், சைக்கிளுடன் நின்றிருந்த மண்ணாங்கட்டி, 60, ஆகியோர் மீது மோதிய ஜீப், சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் மண்ணாங்கட்டி, மோட்டார் சைக்கிளில் வந்த பாபு (30), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருமுருகன் (30) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதில் இருந்த சரவணன் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், போலீஸ் ஜீப்பில் வந்தவர்கள் குடி போதையில் வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து விழுப்புரம், எஸ்.பி.,ஜெயகுமார் பேச்சு நடத்தி, மக்களை அப்புறப்படுத்தினார்.