தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்றும் காவிரி பிரச்சனைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் வலுத்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தி வருகிறார். திருச்சி, முக்கொம்புவில் தொடங்கிய இந்த நடைபயணம் இன்று கடலூரில் முடிவடைகிறது.

இரண்டாவது நாளாக தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது பேசிய அவர், பெண்கள் 4 பேர் இருந்தால் சத்தமாக இருக்கும்; குழப்பம் இருக்கும்; இஇங்கு அதிகமான பெண்கள் அமர்ந்திருந்தும், கட்டுப்பாட்டோடு இருப்பதைப் பார்க்கும்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது என்றார்.

பொது கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வந்திருப்பது இந்த ஆட்சியை அகற்றுவதற்காகத்தான் என்பதை இது உணர்த்துகிறது. காவிரிக்காக அனைத்து அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது வெற்றி போராட்டம் ஆகியது.

இந்த பயணம் அரசியல் பிரசார பயணமல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எள்ளளவும் மத்திய அரசு முயற்சி செய்யவில்லை. வரும் 12 ஆம் தேதி அன்று தமிழகம் வரும் பிரதமர், ஹெலிகாப்டரில் பயணித்தாலும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்றார். மோடி தமிழகத்துக்கு வரும் நாளில் அனைவரும் கருப்பு உடை அணிவோம். வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்

காவிரி பிரச்சனைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை கண்டு அஞ்சவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு கைதான எங்களை சிறையில் வைக்க இடம் இல்லாததால் மாலையே விடுவித்தனர் என்றும் ஸ்டாலின் கூறினார்.