பாஜகவுக்கு அந்த பயம் இருக்கட்டும், மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

திராவிட இயக்கத்தின் பிதாமகனும் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகவும் விளங்கியவர் தந்தை பெரியார். அவரின் 46-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரையும் அவரது மனைவி மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.

அதில், மணியம்மையின் தந்தை ஈ.வே.ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்’’எனப் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவுக்கு மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக பாஜக இந்த பதிவை உடனே நீக்கியது. 

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்;- பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தை பதிவுசெய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக, அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? என்றார். பாஜகவுக்கு அந்த பயம் இருக்கட்டும், மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார். அதிமுக அதற்காவது புலியா பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.