வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரை அறிவிக்கும் விவகாரத்தில் ஸ்டாலின் புதிய திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றிக்கு திருஷ்டி பட்டது போல் வேலூரில் தேர்தல் ரத்தாகிவிட்டது. அதுவும் திமுக வேட்பாளராக போட்டியிட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் சிக்கிய பணம் தான் தேர்தல் ரத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த விவகாரம் அப்போதே பூதாகரமான நிலையில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூட சில பிரச்சனைகள் எழுந்தது.

கோடி கோடியாக தேர்தலுக்கு பணம் செலவு செய்துவிட்டு ஊழல் ஒழிப்பு குறித்து ஸ்டாலின் பேசுகிறார் என்று பாஜக மற்றும் அதிமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இதனால் அப்போதே துரைமுருகன் மீது ஸ்டாலினுக்கு அதிருப்திஏற்பட்டது. தேர்தல் முடியும் வரை துரைமுருகனை சந்திப்பதை தவிர்த்தார். தேர்தல் முடிவு வெளியான பிறகு கூட அண்ணா அறிவாலயத்தில் வைத்து தான் ஸ்டாலினை துரைமுருகன் பார்த்தார்.

அப்போது ஸ்டாலின் சரியாக பேசாத நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரைமுருகன். ஆனால் ஒரு முறை கூட துரைமுருகனை நேரில் சென்று மருத்துவமனையில் ஸ்டாலின் பார்க்கவில்லை. பிறகு ஓரளவிற்கு சமாதானமாகி தற்போது தான் விழாக்களில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் வேலூர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கதிர் ஆனந்தை வேட்பாளராக அறிவித்து தான் பிரச்சனை உருவானது. மேலும் தற்போது வரை அவர் வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளார். எனவே கதிர் ஆனந்தை மீண்டும் வேட்பாளராக அறிவித்தால் சிக்கல் தான் என்று கணக்கு போடுகிறது ஸ்டாலின் தரப்பு. மேலும் ஆளும் கட்சிக்கு நிகராக தேர்தல் பணியாற்ற துரைமுருகனால் முடியாது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

இதனால் இளம் வேட்பாளர் ஒருவரை வேலூரில் களம் இறக்க ஸ்டாலின் பிளான் செய்து வருவதாக கூறுகிறார்கள். மேலும் வேலூர் திமுக பிரபலம் காந்தியும் கூட கதிர் ஆனந்த் இந்த தேர்தலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ரிப்போர்ட் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால் துரைமுருகனை நேரில் அழைத்து வேட்பாளர் தேர்வு குறித்து ஸ்டாலின் பேசுவார் என்றும் அப்போது வேறு வழியில்லாமல் துரைமுருகன் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிறார்கள்.

அதேசமயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தனது மகன் மீண்டும் அறிவிக்கப்படவில்லை என்றால் அது தனக்கு மிகப்பெரிய அவமானம் என்று துரைமுருகன் நினைக்கும் பட்சத்தில் ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.