Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’!

கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் தன்னுடைய தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

mk stalin's letter about my father karunanidhi

கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் தற்பொழுது கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் கருணாநிதியின் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றவண்ணம் உள்ளனர். இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் தன்னுடைய தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்த்தில்,

"எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில்,உடலில்,
ரத்தத்தில்,
சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்"  என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?

95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ‘ உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள்  இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்;தருவீர்களா தலைவரே! 

அந்தக் கொடையோடு,இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்!

கோடானுகோடி உடன்பிறப்புகளின்  இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்.....ஒரே ஒரு முறை ...

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இன-மொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!

“அப்பா அப்பா” என்பதைவிட,”தலைவரே தலைவரே” என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?"

என்று உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios