இன்று  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:

செய்தியாளர்: கஜா புயல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதுபற்றி தங்களின் கருத்து?

முக ஸ்டாலின்: ஆய்வு நடவடிக்கை குறித்து நான் ஏற்கனவே கூறியிருப்பது போல் உடனடியாகவும், முறையாகவும் நியாயமான முறையில் கஜா புயல் குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை. அதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால், இப்போது ஆய்வு செய்துகொண்டிருக்கக்கூடிய நிலையை பார்க்கிற போது அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களே, அவர்களிடத்தில் இரவிலே வந்து ஆய்வு செய்தால் நியாயமான ஆய்வை மேற்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் தான் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதனால், மற்றப் பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியிருக்கும் நிவாரண தொகை 15,000 கோடி ரூபாய். அந்த 15,000 கோடி ரூபாய் போதுமா என்றால் நிச்சயமாக போதாது. ஆகவே, இன்னும் அதிகம் நிதி ஒதுக்கி உடனடியாக நிவாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும். அதற்கு, தொடர்ந்து மாநில அரசு அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். 

செய்தியாளர்: பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்த இடங்களை பார்வையிட தமிழகத்திற்கு இன்னும் வரவில்லை, அதைப் பற்றி தங்களின் கருத்து?

முக ஸ்டாலின்: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வெளி நாட்டில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. ஒருவேளை, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கிற போது வந்தால் வரலாம். 

செய்தியாளர்: கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பின்போது மாநில அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்களே?

முக ஸ்டாலின்: தந்ததே இல்லை என்று, அதையே குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட, இந்தச் சூழ்நிலையிலாவது மத்திய அரசு நிச்சயம் தர வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிற கோரிக்கை!

இவ்வாறு அவர் கூறினார்.