Asianet News TamilAsianet News Tamil

திமுக திணறுதா..? உச்சகட்டத்தில் உட்கட்சி மோதல்.. மா.செ.க்களை மாற்ற ஸ்டாலின் திட்டம்..?


திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடங்கள் முடிவடைவதற்குள் கட்சிக்குள் அதிகார மோதல் வலுத்துள்ளது. மாவட்ட செயலாளருக்கும், அமைச்சர்களுக்கு இடையேயான மோதலால் கட்சியின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

MK Stalin plan to change district secretaries amid escalating infighting in DMK
Author
Tamil Nadu, First Published May 25, 2022, 12:02 PM IST

உட்கட்சி தேர்தலில் மோதல்

தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக  மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைக்காக அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம், நடத்தி  மக்களை தங்கள் பக்கம் திருப்பியது.  இதன் காரணமாக  10 ஆண்டுகளுக்கு பிறகு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பை ஏற்றது.  இந்த வெற்றிக்காக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும்  இரவு பகல் பாராமல் தொடர்ந்து உழைத்ததன் காரணமாக வெற்றி திமுக வசமானது. இந்த நிலையில்  திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பு கழக தேர்தலை நடத்தி முடிக்க திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.  இதன் அடிப்படையில் திமுக அமைப்பு கழக தேர்தலுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தங்கள் ஆதரவு நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும் என்ற ரீதியில் திமுக மாவட்ட செயலாளர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும்  இடையே மோதல் அதிகரித்துள்ளது. பல இடங்களில் காசு வாங்கிக்கொண்டு பதவி வழங்குவதாகவும் மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளன.. பல இடங்களில் மாவட்ட செயலாளர்கள்  மீது  திமுக நிர்வாகிகள்  தலைமை கழகத்திற்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

MK Stalin plan to change district secretaries amid escalating infighting in DMK

தங்கதமிழ்செல்வனை புறக்கணிக்கும் திமுக

 இந்தநிலையில் தேனி மாவட்ட செயலாளராக உள்ள தங்க தமிழ் செல்வனை திமுகவினர் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதாக புகார் எழுந்ததன் காரணமாகவும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தனது ஆதரவு வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்ததும் காரணம் என கூறுகின்றனர். மேலும் தேனி மாவட்டத்திற்கு அரசு நிகழ்விற்கு வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட செயலாளர் என்கிற முறையில்  தங்க தமிழ் செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்கதமிழ் செல்வன் அதிருப்பதியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போல தேனி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள கம்பம் ராமகிருஷ்ணன், தனது ஆதரவாளர்களுக்கு கட்சி பதவி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில்  தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு மாவட்ட செயலாளர்களையும் மாற்ற திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல ஈரோடு மாவட்டத்தில் அமைச்சராக உள்ள முத்துசாமிக்கும் முன்னாள் அமைச்சரான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் தற்போது நல்லசிவம் உள்ள நிலையில் அந்த இடத்திற்கு அதிமுகவில் இருந்து புதிதாக வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது போல வேலூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் திமுவினர் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

MK Stalin plan to change district secretaries amid escalating infighting in DMK

ஈரோட்டிலும் குழப்பம்

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளடி வேலைகள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.   ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளராக இருந்த காதர்பாட்சா முத்து ராமலிங்கத்துக்கு திமுக தலைமை மாவட்ட பொறுப்பாளராக பதவி உயர்வு வழங்கியது.  ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் நிழல் மாவட்ட செயலாளராக  முத்துராமலிங்கத்தின் சகோதரர் கே.வி.மூவேந்தன் செயல்படுவதாக திமுகவினர் புகார் கூறிவருகின்றனர்.  இதன் காரணமாக 15 திமுக ஒன்றிய செயலாளர்கள், மற்றும் 5 சேர்மன்கள் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை மாற்ற கோரி மேலிடத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு எதிராக கட்சித் தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பிய ஒன்றிய செயலாளர்களை மாவட்டத்தில் நடைபெறும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முத்துராமலிங்கம் அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வருவதாகவும் திமுகவினர் வேதனையோடு தெரிவித்துள்ளனர். 

MK Stalin plan to change district secretaries amid escalating infighting in DMK

கட்சி பதவிக்கு காசு ?

மேலும் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் மீது திமுக தலைமைக்கு புகார் சென்ற நிலையில் இந்த புகார் தொடர்பாக திமுக மேலிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளராக உள்ள ஜெயராமன், தனது முகநூலில்  எந்த மாவட்டத்தில் கட்சிக்காரர்கள் பதவி வழங்க பணம் வாங்கவில்லை? எல்லா மாவட்டத்திலும் கட்சி பதவிக்கும், டெண்டர் வழங்குவதற்கும் ஏலம் விட்டு பணம் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இது  திமுக தலைமையை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வருகிற 28 ஆம் தேதி  நடைபெறவுள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios