Asianet News TamilAsianet News Tamil

அண்ணா பிறந்த நாளில் அதிரவைக்கும் விழா எடுக்கும் ஸ்டாலின்... உ.பி.,க்களை உசுப்பிவிடப்போகும் மெகா மீட்டிங்!!

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள முப்பெரும்விழா என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Mk Stalin plan mega political function
Author
Thiruvannamalai, First Published Sep 8, 2019, 4:57 PM IST

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள முப்பெரும்விழா என ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அழைப்பு அறிக்கையில்; பெருமைகள் மலைபோல் குவிந்திருக்கும் திருவண்ணாமலையில், ஏறுபோல் பீடுநடை போடும் தி.மு.க.வின் “முப்பெரும் விழா” செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க.வை உருவாக்கி அதனைக் கவின்மிகு மாளிகையாகக் கட்டிக்காத்து, ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15. அந்த அண்ணாவை அரசியலில் ஆளாக்கிய அகிலம் போற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. பெரியாரிடம் இருந்து பிரிந்தாலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய், இனமொழி எதிரிகள் எங்கும் தப்பி ஓடிவிட முடியாதபடி குறிவைக்கும் இயக்கமாம் தி.மு.க.வை பேரறிஞர் அண்ணா உருவாக்கியதும் செப்டம்பர் 17. பெரியார் - அண்ணா - தி.மு.க. இந்த மூன்றுக்கும் ஒரு சேர உற்சாகத்துடன் நாம் காண்கிற விழாதான், தலைவர் கருணாநிதி வகுத்தளித்த முப்பெரும்விழா.

Mk Stalin plan mega political function

வெற்றிகள் - பதவிகள் தி.மு.க.வை அலங்கரித்தாலும், நெருக்கடிகள் - சோதனைகள் சூழ்ந்து நின்றாலும், தென்றலாயினும், புயலாயினும், இரண்டையும் ஒன்றாகக் கருதி தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் - சமுதாய உரிமைகளுக்கு அயர்ந்திடாமல் பாடுபடும் இயக்கமான தி.மு.க.வின் கொள்கை திக்கெட்டும் எதிரொலிக்கும் விழாதான் முப்பெரும்விழா.

கூடிக்கலையும் கூட்டமல்ல முப்பெரும்விழா. தலைவர் கருணாநிதி வகுத்துத் தந்த வழியில், தங்கள் இன்னுயிராக எந்நாளும் தி.மு.க. காக்கும் இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் நிகழ்வும் இம்முறையும் இடம்பெறுகிறது.

மக்கள் சேவையாக தங்கள் அன்றாடப் பணியை மேற்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் எனத் தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஊக்கப்படுத்தி வரும் மக்கள் இயக்கமாகத் தி.மு.க. எனும் பேரியக்கம் திகழ்கிறது. அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி, மருத்துவம் போன்ற உதவிகள் தொடர்ந்திடும் நிலையில், அரசியல் களத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த உரைவீச்சுகள் முப்பெரும் விழாவில் தொண்டர்களை ஊக்கப்படுத்தி, உறைவிட்டெழும் போர்வாளாக ஜனநாயகக் களம் காணச் செய்யும்.

Mk Stalin plan mega political function

‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரி’ போல, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எல்லாம் உடன்பட்டு, முழந்தாளிட்டு அவற்றை நிறைவேற்றுகிறது மாநிலத்தை ஆள்கின்ற அ.தி.மு.க. அரசு. ‘நீட்’ தேர்வு தொடங்கி, ரேஷன் கார்டு வரை தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் பறிகொடுத்துவிட்டு, பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு, பகல்கொள்ளையில் பரவசம் கொண்டு, பல நாடுகளுக்கும் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள். சுற்றுலாத் துறைக்கு ஓர் அமைச்சர் இருப்பது வழக்கம். இங்கே முதல்-அமைச்சரில் தொடங்கி ஒட்டுமொத்த அமைச்சரவையும் குத்தகை போல சுற்றுலா அமைச்சரவை ஆகியிருக்கிறது.

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது முப்பெரும்விழா.

முப்பெரும்விழாவில் கூடிடுவோம். பெரியார், பேரறிஞர் கொள்கை வழி தி.மு.க. எனும் பேரியக்கத்தைத் தலைவர் கருணாநிதி வகுத்த வழியில் வாழ்நாளெல்லாம் கண்ணெனக் காத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios