சில ஆண்டுகளாக மு.க.ஸ்டலினுடன் தோழமை காட்டி வந்த கமல் திடீரென வெட்கமில்லையா... என்றெல்லாம் தடித்த வார்த்தைகளை வீசி தடாலடி காட்டியதன் அதிர்ச்சி பின்னணி தற்போது கசிய ஆரம்பித்து இருக்கிறது. 

மு.க.ஸ்டாலினிடம் நட்பாகவே இருந்து வந்தார் கமல். முரசொலி பவள விழாவில் சிறப்பு விருந்தினராக மேடை ஏறினார். மு.க.ஸ்டாலின் ஏவுதலின் படியே ஆளும் தரப்பு அமைச்சர்களை கமல் சீண்டியதாக பேச்சுகளும் உலா வந்தன. அப்படி இருக்கும்போது மு.க. ஸ்டாலினை வெட்கமில்லையா எனக் கேட்டு வெறுப்பேற்றி இருக்கிறார் கமல். இதன் பின்னணி இப்போது வெளி வந்துள்ளது. 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் சேர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில், சில துாது சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், 'நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிட, மூன்று சீட் ஒதுக்கினால் கூட்டணிக்கு வருகிறோம்’’ எனக் கூறியிருக்கிறார்கள். அதைக்கேட்ட மு.க.ஸ்டாலின் நையாண்டி சிரிப்புடன், ‘’நீங்க கேட்டதை நிச்சயமா தர்றோம். 

ஆனால், இப்போ இல்லை. சட்டசபை தேர்தலுக்காக தருகிறோம். கூட்டணிக்கு வரச் சொல்லுங்கள்'' எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு, நொந்துபோய் திரும்பி இருக்கிறார்கள் தூது சென்றவர்கள். நம்மை இவ்வளவு கொச்சை படுத்தி விட்டாரே என்கிற ஆதங்கத்தில் தான், 'சட்டசபையில் சட்டையை கிழிச்சுக்க மாட்டேன்... என்னைப் பார்த்து காப்பியடிக்க வெட்கமாக இல்லையா..’ என ஸ்டாலினை, காய்ச்சி எடுத்து விட்டாராம் கமல். மூன்று சீட்டுக்கள் கிடைத்திருந்தால் 'தந்தை வழியில் தடம் புரளாத தலைவன்' என கவிதை நடையில் பாராட்டி இருப்பார் கமல்.